Wednesday, December 21, 2011

எனது ‘‘பட்டாம்பூச்சி வாசம்’’ எனும் கவிதைத் தொகுப்பிற்கு கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்களின் அணிந்துரை


பட்டாம்பூச்சி வாசம்


கனவுகளும்.... கவிதைகளும் .....
 கவிஞர் நெல்லை ஜெயந்தா

நீண்ட ராத்திரியில் தெரிகிற நீலவானத்தின் நட்சத்திரங்களைப் போல கண்களுக்குள் இறங்கும் கவிதைகளால் நம்மை மீள முடியாத மயக்கத்தில் ஆழ்த்துகிறார் மீனாட்சிசுந்தரம்.

‘‘இடியாப்பம்போல் உள்ளத்தைப் படைத்துவிட்டு அதன் தலைப்பைத் தேடுகிற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறாய்’’ என்று கடவுளை நோக்கிச் சொல்லும் கவியரசரைப்போல, கவிதைகளைப் பற்றிச் சொல்லவிடாத இந்தக் கவிஞர் தூரத்தில் கூட துல்லியமாய் தெரியும் திருவிழா காலத்தின் தேரோட்டம் போல் எழுதியிருக்கிறார் கவிதைகளை.

குறிஞ்சியும் மருதமும் கூட்டணி வைத்திருக்கிற மலையடிவாரம் மாதிரி இசைப்பாடல்களும் கவிதைகளும் இறண்டறக் கலந்திருக்கும் தொகுப்பு இது.

இரும்புச் சங்கிலியாய் மாறும் எழுத்துக்களோடு கட்டிப்போடுகிற ஒரு கவிதை நூலகம்.

நண்பனே!
நீ
சுவாசிக்கும் காற்றை
சுத்திகரிப்பது மரம்
உன்னை
சுத்திகரிப்பது புத்தகம்!

என்ற வரிகள், அம்மாவின் இடுப்பில் அமர்ந்திருக்கும் போதும், கைகளில் பொம்மையை கவனமாய் பிடித்திருக்கும் குழந்தைகளைப் போல கண்களில் உட்கார்ந்தபடி இறுக்கிப் பிடித்துக் கொள்கிறது நம் இதயத்தை.

சாதாரணமாகவே சாதுர்யமானவை கலைக் கூத்தாடியின் கால்களும். படகோட்டியின் கைகளும். அவை இரண்டும் கலந்து என் கண்களுக்குத் தெரிகின்றன இவர் இசைப்பாடல்களைப் பார்க்கையில்!
பருவம் போடும் கோலம் என்னை
பனியாய் கரைக்குது - ஒரு
உருவமில்லா கனவு வந்து
உயிரைக் கிழிக்குது.
என்பன போன்ற வரிகளை ஓவியனின் விரல்களை உள்வைத்து சிற்பியின் கைகளால் செதுக்கியிருக்கிறார் மீனாட்சி சுந்தரம்.

சமூகத்தில் அவ்வப்போது வந்து அழவைக்கின்றன பேனாவை கண்ணீரால் நிரப்பும் காலங்கள்.

கடல் ஊருக்குள் வந்த அந்த கண்ணீர் நிமிடங்களை கவிதைகளால் பார்க்கும்போது உடைந்துபோன குளத்தில் உயிர்வாழும் மீன்களாகிவிடுகிறோம்.

கடலே!
கடத்தல் தொழிலை
ஏன் செய்தாய்?

என்ற வரிகளில் பொதிந்திருக்கும் முரண் கண்ணீரைத் துடைத்தபடி கைகுலுக்கச் சொல்கிறது கவிஞரை,

‘‘வெயிலொளி எந்தப் பொருள்மீது பட்டாலும் அந்தப் பொருள் அழகுடையதாக தோன்றுமென்று ஷெல்லி என்ற ஆங்கிலக் கவிராயன் சொல்கின்றான். எனக்கு எந்த நேரத்திலும் எந்தப் பொருள்களும் பார்க்க அழகுடையனவாகத் தோன்றுகின்றன’’ என்பானே பாரதி, அப்படி எனக்கு அழகுடையதாகத் தோன்றின பட்டாம்பூச்சி வாசத்தின் பல கவிதைகள்.

அள்ள அள்ளக் குறையாத அழகுடன் இருக்கிறது ‘அட்சய பாத்திரம் நீ’ கவிதை,
வாலிப சூரியன் எழுந்தால் உடனே
வசந்தம் மண்ணில் ஒளியாய் மிளிரும்
ஆலிலைச் சருகுகள் உதிர்ந்தால் தானே
அடுத்த வசந்தம் கிளையில் அமரும்
என்பன போன்ற வரிகளால் மகுடி நாகமாய் மயங்கி விடுகிறோம் நாம்.

எளிய மனிதர்களையும் அழிவற்றவர்களாக்கும் மகத்தான வல்லமை உடையது என்று ஜெயமோகன் குறிப்பிடுகிற மொழி கைகளில் வசப்படத் தொடங்கி இருக்கிறது கவிஞருக்கு.

உங்களுக்கு பகல் பொழுதை கவிதைகளாலும் இரவுப் பொழுதை கனவுகளாலும் கடவுள் நிரப்புவாராக என்ற கலில் ஜிப்ரானின் வரிகளை கவிஞரை நோக்கி நான் முன் மொழிகிறேன். வாசித்துவிட்டு நீங்கள் வழிமொழிவீர்கள்!


No comments:

Post a Comment