Powered By Blogger

Saturday, February 18, 2012

இயக்குனர் Kbb.நவீன் அவர்களின் “நிக்கோடின் குச்சிகள்”



நிக்கோடின் குச்சியும் யானையும்


புகைத்தல் என்பது புலன்களைப் புத்துணர்ச்சியாக்கும் ஒரு துன்ப நிவாரணி. சுமார் கி.மு.5000 ஆண்டுக்கு முன்னமே உலக நாடுகளில் தன் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தது புகையிலை. இடத்திற்கு இடம் புகைத்தலின் தன்மையும் வழிமுறைகளும் மாறுபடுகின்றன. ஓரிடத்தில் புனிதமானது என்றும், மற்றோரிடத்தில் பாவமானது என்றும், வேறொரிடத்தில் நவீனமானது என்றும், பிரிதோரிடத்தில் சுகாதாரக் கேடானது என்று கருதப்பட்டாலும் புகைத்தல் என்பது இன்றும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. 

இயக்குனர் Kbb.நவீன் அவர்களின் “நிக்கோடின் குச்சிகள்” என்னும் தலைப்பை வாசிக்கும் பொழுதே நவீனத்தின் வீச்சு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டுமென்று புரிந்துவிடுகிறது. ஆயினும் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் நவீன கவிதையின் கட்டுமானத்தில் அமைந்தவை அல்ல என்றாலும் கூட,பாடுபொருள்கள் யாவையும் நம்மைச் சார்ந்தவர்களுக்கு நிகழ்ந்தவையாகவும் நிகழ்ந்து கொண்டிருப்பவையாகவும் மனதை வசப்படுத்துகிறன. சமூகம் சார்ந்த உணர்வுகளும்; வாழ்வியல் சார்ந்த உணர்வுகளும் வார்த்தைகளாளய் விரிகின்றன.

தொகுப்பின் முதல் கவிதையிலேயே நம்மை ஈர்த்து விடுகிறார். குழந்தைகளின் உலகம் கொண்டாட்டங்கள் நிறைந்தவையே. ஆனால் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை அக்கொண்டாட்டம். அடிப்படைக் கல்வி கூட அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கு வாய்க்கப்படாததை எண்ணும்போது வேதனையே மிஞ்சுகிறது. யதார்த்த வாழ்வியலின் வலியை சொல்வர்ணம் பூசாமல் இயல்பாக எடுத்துரைக்கிறார்.
குழந்தைத் தொழிலாளர்
ஒழிப்புத் திட்ட மாநாடு..
மாநாட்டுப் பந்தலில்
 கடலை முறுக்கு விற்றனர்
சிறுவர்கள்!
*

நவீனம் குறித்த ஒவ்வொருவருக்கும் பல்வேறு கருத்து நிகழ்ந்த போதிலும் நவீனத்துவம் எல்லோர் வாழ்விலும் நிரம்பியதாகவே இருக்கிறது. பொதுவாகவே பழமை கட்டுக்குள் அடங்கிக் கிடப்பதை விரும்புவதில்லை நம் ஆழ்மனங்கள். ஓவ்வொரு நொடியும் வீரியமிக்க புதுமைகளை நோக்கிச்; செல்லும் பொழுது மனதின் வேகம் விவேகமிக்கதாகிறது.

நவீன கவிதைகள் குறித்து யோசிக்கும் பொழுதும் வாசிக்கும் பொழுதும் சொற்கட்டுமானத்தில் கண்ணாடி மாளிகை போல் புதுமைகள் நிகழ்ந்தபோதிலும் பலருக்குப் புரியாதவையாகவே புலப்படுகிறன. நவீன கவிதை குறித்த தன் ஆதங்கத்தை இத்தொகுப்பில் பதிவு செய்திருக்கிறார்.
நான் எழுதத் தயங்கும்  
பாலியல் குறித்த கவிதைகள்தான்   
அவனுக்கும் கவிதைகளே..

சத்தியமாய் சொல்கிறேன்
அவனது கவிதைகள் எதுவுமே  
இன்றுவரை புரிந்ததில்லை..

 இருப்பினும் அவனை   
இலக்கிய உலகம்  
மாபெரும் கவிஞனென கொண்டாடுகிறது..

 ஒருவேளை எவனுக்கும் புரியாமல் 
எழுதுவதற்குபெயர்தான் 
கவிதையா..?
*

ஆரம்ப காலகட்டத்தில் போதையேற்றக் கூடிய இலையைப் பயன்படுத்தி புகைவரச் செய்து நுகர்ந்தனர். புகைவரக் கூடிய அந்த இலைக்கு புகையிலை என்று பெயராயிற்று என்பர் ஆய்வாளர்கள். 

போர்த்துக்கல் நாட்டுக்கான பிரான்ஸ் தூதுவரான ஜான் நிக்கொட் என்பவர் 1559 ஆம் ஆண்டில் கத்தரீன் டி மெடிசியின் அரண்மனைக்கு நிக்கோடினை மருந்துப்பொருளாக அனுப்பி வைத்தார்.
நிக்கோடின் என்பது போதை வஸ்துவாய் இன்று புழக்கத்தில் உள்ளது.

நிக்கோடின் தடவப்பட்ட கம்பியால் யானையைக் குத்தினால்ää யானை தன் வீரியத்தை இழந்து உடனே மயங்கிவிடும். ஒரு சிகரெட்டில் மில்லிக்கிராம் அளவுதான் நிகோடின் உள்ளது. ஆனால் அதை தனியாகப் பிரித்து ஊசியால் உடலுக்குள் செலுத்தினால் நிக்கோடினின் நச்சுத் தன்னை உடனே உயிரைப் பறித்துவிடும். 
இழுக்க இழுக்க 
ஓன்றும் இல்லாதது
தெரிந்தே இருப்பினும்

விட முடியவில்லை
இந்த பாழாய்ப்போன
நிகோடின் குச்சிகளை!

என்று நிகோடினுக்கு அடிமையாய் போனவனின் மனநிலையை பதிவு செய்கிறார்.

இப்புத்தகத்தில்; உணர்வியல் சார்த்த கவிதைகளை ஒவ்வொரு பக்கத்திலும் காண முடிகிறது. வாசித்தலும் நேசித்தலும் கவிதையை அழகாக்குகின்றன.

Wednesday, December 21, 2011

எனது ‘‘பட்டாம்பூச்சி வாசம்’’ எனும் கவிதைத் தொகுப்பிற்கு கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்களின் அணிந்துரை


பட்டாம்பூச்சி வாசம்


கனவுகளும்.... கவிதைகளும் .....
 கவிஞர் நெல்லை ஜெயந்தா

நீண்ட ராத்திரியில் தெரிகிற நீலவானத்தின் நட்சத்திரங்களைப் போல கண்களுக்குள் இறங்கும் கவிதைகளால் நம்மை மீள முடியாத மயக்கத்தில் ஆழ்த்துகிறார் மீனாட்சிசுந்தரம்.

‘‘இடியாப்பம்போல் உள்ளத்தைப் படைத்துவிட்டு அதன் தலைப்பைத் தேடுகிற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறாய்’’ என்று கடவுளை நோக்கிச் சொல்லும் கவியரசரைப்போல, கவிதைகளைப் பற்றிச் சொல்லவிடாத இந்தக் கவிஞர் தூரத்தில் கூட துல்லியமாய் தெரியும் திருவிழா காலத்தின் தேரோட்டம் போல் எழுதியிருக்கிறார் கவிதைகளை.

குறிஞ்சியும் மருதமும் கூட்டணி வைத்திருக்கிற மலையடிவாரம் மாதிரி இசைப்பாடல்களும் கவிதைகளும் இறண்டறக் கலந்திருக்கும் தொகுப்பு இது.

இரும்புச் சங்கிலியாய் மாறும் எழுத்துக்களோடு கட்டிப்போடுகிற ஒரு கவிதை நூலகம்.

நண்பனே!
நீ
சுவாசிக்கும் காற்றை
சுத்திகரிப்பது மரம்
உன்னை
சுத்திகரிப்பது புத்தகம்!

என்ற வரிகள், அம்மாவின் இடுப்பில் அமர்ந்திருக்கும் போதும், கைகளில் பொம்மையை கவனமாய் பிடித்திருக்கும் குழந்தைகளைப் போல கண்களில் உட்கார்ந்தபடி இறுக்கிப் பிடித்துக் கொள்கிறது நம் இதயத்தை.

சாதாரணமாகவே சாதுர்யமானவை கலைக் கூத்தாடியின் கால்களும். படகோட்டியின் கைகளும். அவை இரண்டும் கலந்து என் கண்களுக்குத் தெரிகின்றன இவர் இசைப்பாடல்களைப் பார்க்கையில்!
பருவம் போடும் கோலம் என்னை
பனியாய் கரைக்குது - ஒரு
உருவமில்லா கனவு வந்து
உயிரைக் கிழிக்குது.
என்பன போன்ற வரிகளை ஓவியனின் விரல்களை உள்வைத்து சிற்பியின் கைகளால் செதுக்கியிருக்கிறார் மீனாட்சி சுந்தரம்.

சமூகத்தில் அவ்வப்போது வந்து அழவைக்கின்றன பேனாவை கண்ணீரால் நிரப்பும் காலங்கள்.

கடல் ஊருக்குள் வந்த அந்த கண்ணீர் நிமிடங்களை கவிதைகளால் பார்க்கும்போது உடைந்துபோன குளத்தில் உயிர்வாழும் மீன்களாகிவிடுகிறோம்.

கடலே!
கடத்தல் தொழிலை
ஏன் செய்தாய்?

என்ற வரிகளில் பொதிந்திருக்கும் முரண் கண்ணீரைத் துடைத்தபடி கைகுலுக்கச் சொல்கிறது கவிஞரை,

‘‘வெயிலொளி எந்தப் பொருள்மீது பட்டாலும் அந்தப் பொருள் அழகுடையதாக தோன்றுமென்று ஷெல்லி என்ற ஆங்கிலக் கவிராயன் சொல்கின்றான். எனக்கு எந்த நேரத்திலும் எந்தப் பொருள்களும் பார்க்க அழகுடையனவாகத் தோன்றுகின்றன’’ என்பானே பாரதி, அப்படி எனக்கு அழகுடையதாகத் தோன்றின பட்டாம்பூச்சி வாசத்தின் பல கவிதைகள்.

அள்ள அள்ளக் குறையாத அழகுடன் இருக்கிறது ‘அட்சய பாத்திரம் நீ’ கவிதை,
வாலிப சூரியன் எழுந்தால் உடனே
வசந்தம் மண்ணில் ஒளியாய் மிளிரும்
ஆலிலைச் சருகுகள் உதிர்ந்தால் தானே
அடுத்த வசந்தம் கிளையில் அமரும்
என்பன போன்ற வரிகளால் மகுடி நாகமாய் மயங்கி விடுகிறோம் நாம்.

எளிய மனிதர்களையும் அழிவற்றவர்களாக்கும் மகத்தான வல்லமை உடையது என்று ஜெயமோகன் குறிப்பிடுகிற மொழி கைகளில் வசப்படத் தொடங்கி இருக்கிறது கவிஞருக்கு.

உங்களுக்கு பகல் பொழுதை கவிதைகளாலும் இரவுப் பொழுதை கனவுகளாலும் கடவுள் நிரப்புவாராக என்ற கலில் ஜிப்ரானின் வரிகளை கவிஞரை நோக்கி நான் முன் மொழிகிறேன். வாசித்துவிட்டு நீங்கள் வழிமொழிவீர்கள்!


Sunday, November 20, 2011

என் இதயத் தடாகத்தில் அல்லிப் பூக்களின் ஆலாபனை




என் இதயத் தடாகத்தில் அல்லிப் பூக்களின் ஆலாபனை

வித்தகக் கவிஞர் பா.விஜய்

ஏழாண்டுகளுக்கும் மேலாக என்னிடம் உதவியாளராக இருந்து கொண்டிருக்கும் மீனாட்சிசுந்தரம், இன்று கவிஞர் என்ற உயர்வுக்குத் தன்னுடைய சுய உழைப்பின் மூலம் பரிணமித்திருக்கிறான்.
இவன் என்னுடைய ரசிகன் - வாசகன் - உதவியாளன் என்பதையும் கடந்து, நண்பன் - சகோதரன் என்ற உறவுமுறைக்குள் எங்கள் குடும்பத்தினர் அனைவரோடும் இதயங்கலந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு இனிமையாளன்.
இவனைப் பற்றிச் சொல்லும் போது, மதுரை நண்பர் கவிஞர் இரவி அவர்கள் சொன்னார் ‘‘இவ்வளவு ஆண்டுகள் உங்களோடு கூடவே இருந்துவிட்டு கவிதை எழுதாவிட்டால் எப்படி?’’ என்று.
ஆனால், இவன் கவிதை எழுதுவதற்கு பிரத்யோகமாக நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணமும், அதை நூலாக்க வேண்டும் என்ற உத்வேகமும் இவனுக்குள் தானாகவே உருவான ஒன்று, அதுதான் நியாயம்!
ஒருவனை நல்ல படிப்பாளனாக இன்னொருவர் உருவாக்க முடியும். ஆனால் நல்ல படைப்பாளியாக இன்னொருவரால் உருவாக்க முடியாது.
கவிஞன் என்பது தனக்குத் தானே செய்து கொள்கிற கர்வம் மிகுந்ததொரு பிரசவம். அப்படிப்பட்ட அனுபவத்தை தன்னுடைய படைப்புகளின் மூலம் அடைந்திருப்பது குறித்து இவன்மீது எனக்கு பிரகாசமான நம்பிக்கை ஏற்படுகிறது.
என்னோடு கூட இருந்த நாட்களில் - வருடங்களில் என்னுடைய செயல்கள், என்னுடைய பேச்சுமுறை, எனக்குப் பிடித்தது, பிடிக்காதது என அனைத்தையும் அறிந்து வைத்திருக்கக் கூடிய தன்னுடைய வேலையில் மிகத் தூய்மையாக இருந்து பணிபுரிந்து கொண்டிருக்கக் கூடிய ஒரு நல்ல பண்பாளனின் படைப்பாகவே இந்த கவிதைத் தொகுப்பைப் பார்க்கிறேன்.


வழக்கமாக, இளையதலைமுறை கவிஞர்கள் ஏராளமானோர் என்னிடம் அணிந்துரை வேண்டி கவிதைத் தொகுப்பு அனுப்புவார்கள். அப்படி நிறைய புத்தகங்கள் வருகையினால் எல்லா படைப்புகளையும் முழுமையாகப் படித்து என்னால் அணிந்துரை எழுதித்தர இயலாமல் போகலாம். அதனால் நூல்களைப் படிக்கும் பொறுப்பை மீனாட்சி சுந்தரத்திடம்தான் வழங்குவேன்.
அவனும் அந்த நூல்களைப் படித்து, அதிலுள்ள சிறப்பான கவிதைகளைத் தேர்ந்தெடுத்து என் குறிப்பேட்டில் குறித்து வைத்துவிடுவான். பிறகு, அந்த படைப்புகளைப் படித்துப் பார்த்துவிட்டு அவற்றிற்குத் தகுந்தாற்போல் அணிந்துரை வழங்குவது என் வழக்கம்.
எனவே இப்புத்தகத்தையும் அப்படி அழகான கவிதைகளை எடுத்துத் தொகுத்துச் சொன்னால் அது எல்லோருக்கும் நான் செய்கின்ற சமமானதொரு நிகழ்வாகிவிடும் என்பதனால் இவனோடு உள்ள என் நேசத்தைப் பதிவு செய்கிறேன்.
இப்புத்தகம் முழுவதும் முதல்முறை எழுந்து நடக்க ஆரம்பித்த ஒரு கவிஞனின் தைரியமான பார்வையாகவே பார்க்கிறேன்.

இவனைவிட அதிகம் நேசிக்கப்பட வேண்டியவர் இவனுடைய தந்தையார் திரு.பாலசுப்பிரமணியம். நெல்லைச் சீமையிலே சங்கரன்கோவில் என்கின்ற திருத்தலத்திலே அமைந்திருக்கிறது இவர்களுடைய இல்லம்.
இவனுடைய மூத்த சகோதரியின் திருமணத்திற்காக நான் சென்றிருந்த பொழுது, கிட்டத்தட்ட எண்பது வயதைக் கடந்த தாத்தா பாட்டியுடன் வசித்துக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த குடும்பத்தினரும், சிறுவர்களில் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரும் என்மீது பொதித்திருந்த அன்பினை, வைத்திருந்த மதிப்பினை நேரில் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்து உணர்ந்தேன்.
அத்திருமண நிகழ்ச்சியின் போது இவனுடைய தந்தையார் அவ்வளவு பரரப்பான வேலைகள், பணி நிமித்தங்களுக்கு இடையிலேயும் என்னை தங்கள் வீட்டின் மூத்த பிள்ளையைப் போல கவனித்துக் கொண்ட விதமும், நேசித்து அன்பு செலுத்திய விதமும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
எப்போது சென்னைக்கு வந்தாலும் என்னை சந்தித்து உரையாடுதல் என்பது அவருடைய இதயத்திற்குப் பிடித்தமானது. இப்படியாய், அவர்களுடைய குடும்பத்தோடு கலந்து பழகிய உணர்வலைகள் இப்புத்தகத்தைப் படிக்கையில், கைகளில் தாங்குகையில் என் இதயத் தடாகத்தில் அல்லிப் பூக்களாய் மலர்ந்து ஆலாபனை செய்து எங்கெங்கும் மணம் பரப்புகின்றன.
இவனுடைய சகோதரர் பால.கணேசன் நல்ல வடிவமைப்பாளர். ஊரார் வீட்டுப் பொங்கலுக்கே நெய்யை அள்ளி ஊற்றி ஊற்றி சமைப்பார்கள் என்றால், தன் வீட்டுப் பொங்கலுக்கு காட்டும் தாராளத்தைக் கேட்கவா வேண்டும். பட்டாம்பூச்சி வாசம் எனும் இத்தொகுப்பை பார்த்துப் பார்த்து செதுக்கிச் செதுக்கி வடிவமைத்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.



எனக்குத் தெரிய ஒரு கவிஞரிடம் நீண்டகாலம் உதவியாளராக இருந்து, அவர் ஒரு கவிதைப் புத்தகத்தை எழுதி, அதை அந்த கவிஞரே வந்து வெளியிடுவது என்பது மிகச்சாதாரணமாக சாமான்யமாக இலக்கிய உலகில் நிகழ்ந்துவிடக் கூடிய ஒன்று அல்ல.
நானறிந்த வரையில் இதற்கு முன்பு இதுபோல் நிகழ்ந்திருக்கவில்லை. நிகழ்ந்திருந்தால் மகிழ்ச்சி! அந்த அளவில் இந்நூலினைக் கண்டு நான் பெருமிதம் அடைகிறேன்.
இந்தப் படைப்பை வாசிக்கையில், என்னிடம் இத்தனை ஆண்டுகாலம் உதவியாளராக இருந்து கொண்டிருக்கிற இவனை தோள் தட்டிக் கொடுத்துத் தொடர்ந்து ஓடும் உத்வேகத்தினை ஏற்படுத்த வேண்டுமென எண்ணுகிறேன்.


குமரன் பதிப்பகத்தின் சார்பாக இந்நூலினை வெளியிடும் திரு,வைரவன் அவர்கள் குறிப்பிடப்பட வேண்டிய மாபெரும் சான்றோர். என்னுடைய பல புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்ற இவர், என்னுடைய உதவியாளரின் கவிதைப் புத்தகத்தையும் வெளியிடுவது என்பது என்னையும் சேர்த்து கௌரவிக்கின்ற நட்புக்கு அவர் தரும் மரியாதையாகவே நான் கருதுகிறேன்.


வழக்கமாய், சம்பிரதாயமாய், ஒரு அணிந்துரையை கடிதத்தை நிறைவு செய்வதைப் போல என்னால் இதை நிறைவு செய்ய இயலவில்லை, இவன் என்னிடம் படித்தது, இலக்கியத்தில் படித்தது, வாழ்க்கையில் படித்தது என அனைத்து படிப்பினையும் ஒன்று திரட்டி இந்நூலின் மூலமாக ஆரம்பித்திருக்கின்ற எழுத்துப் பயணத்தில் மிகப்பெரிய எல்லைகளைத் தொட்டு பிரகாசமானதொரு எதிர்காலத்தை என்றென்றும் அடைவதற்கு இதயப்பூர்வமாக இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

இவனுடைய எழுத்துக்கள் வாழ்க.
இவனுடைய முயற்சிகள் வெல்க!

நம்பிக்கையுடன்
 பா.விஜய்

Tuesday, June 14, 2011

ஆறங்குல அழகிய வதமே

பல்லவி

ஆண்:
இரு இரு இரு கண்ணில் 
ஒரே ஒரே ஒரே மின்னல் 
காதல் மின்னஞ்சல்

ஐ லவ் யூ
ஹம் கியர் 
ஹம் டூ மீ
ஹம் டூ மீ 
ஹம் டூ மீ
ஹம் டூ மீ

ஆண்:
இரு இரு இரு கண்ணில் 
ஒரே ஒரே ஒரே மின்னல் 
அலை வீசிடும் நெஞ்சில் 
காதல் மின்னஞ்சல் 
காதல் மின்னஞ்சல்

பெண்:
சிறு பார்வையால்
சிதறலாய் - ஒளி
சிதறலாய்

ஆண்:
உயிர் வேர்களில் 
உதறினாய் - தீ
உதறினாய்

மழை நனைய வந்த வேளை நீ
வெய்யில் வீசி ஓடி ஒளிந்தாய்

ஆண்:
இரு இரு இரு கண்ணில் 
ஒரே ஒரே ஒரே மின்னல் 
அலை வீசிடும் நெஞ்சில் 
காதல் மின்னஞ்சல் 
காதல் மின்னஞ்சல்

ஓ.. 
ஹனி ஹனி ஹனி ஹனி நிலவே 
இனி மெனி மெனி மெனி சுகமே
நிதம் புது புது புது இரவே!

சரணம் - 1

ஆண்:
வெண்பனி 
வெயில் வீசிடும் மார்கழி
தேன்கனி 
ருசி ஊறிடும் நாக்கடி
 
பெண்:
எட்டிப் போக நீ
தேளாய் மாறி
கொட்டிப் போகிறாய் 
வா... வா..

கிட்ட வந்து நீ 
காற்றாய் மாறி 
தொட்டுப் பேசினாய்..
போ.. போ.. 
ஆண்:
ஆறங்குல அழகிய வதமே
உடை உடுத்தியே உலவிடும் வனமே

பெண்:
படர்கின்ற கொடியே
பற்றிக்கொள் பருவத்தின் செடியை
ரசித்தபடி இனி கடத்திடு எனையே

சரணம் - 2

பெண்:
ஆண்துணை
ஒரு பெண்ணின் பூவலை 
நீயெனை
வந்து தழுவிடும் நீர்நிலை

ஆண்:
செல்லக் கோபமும் 
கொண்டால் கூட
கொஞ்சல் நீளுதே
வா.. வா.. 

எல்லை மீறிடும்
கொண்டல் போலே
உள்ளம் நோகுதே
போ.. போ

பெண்:
மலர்தூவிய மன்மத மதனே
மன மஞ்சத்தை ஆழ்கின்ற யுவனே

ஆண்:
இனிக்கின்ற இதழே
இரவெல்லாம் இளமையின் மழையே
நனைந்தபடி உடல் நடக்கின்ற கடலா

Sunday, May 8, 2011

உயிர்பசி சமைக்கும் உலைக்கலன்






சுவாசங்களற்ற சுற்றுப்பாதையில்
சுற்றித் திரிவதுபோல் சுழல்கிறேன்
நீயில்லாத தனிமைத் திடலில்

வெறுமையின் வெப்பக்கனலில்
வெந்து தணிகிறது
முத்தமிடும் முன் நீ நிகழ்த்திய
முந்தைய வெட்கப் பொழுதுகள்

ஏக்கத்தின் தாக்கத்தில்
ஏங்கிக் கிடக்கிறது என் ஏகாந்தம்
உன் உடலெனும் நீர்த்தேக்கத்தில்
மீன்குஞ்சுகளாய் மாற..!

மின்காந்த அலைகளாய்
மிதந்துவரும் நின் நினைவலைகளில்
அலையெழுப்புகிறது என் கடல்!

பனிக்காற்றின் புகைமூட்டத்தில்
பார்க்க முடியாமல்போன பிரதேசமாய்
என் பருவ பால்வெளி மண்டலம்
உன் அருகாமை நினைவுகளோடும்
உருகி வழியும் கனவுகளோடும்!

அக்கினி வெய்யிலின் உக்கிர கொதிப்பில்
வெந்நீராய் மாறிய தண்ணீராய்
வேகிறது என் காதல்
காமத்தை உதற முடியாத
காட்டுத்தீயின் தகிப்போடு!

மீண்டும் மீண்டும் நீண்டித் தூண்டும்
நின் நினைவுகள் யாவும்
உயிர்பசி சமைக்கும்
உலைக்கலன்களென
உணர்கிறேன் இப்போது!

Saturday, February 26, 2011

கடவுள் வசிக்கிறார் சொற்களில்



ஆலய அர்ச்சனையை விட
ஓதுவார்கள் ஓதும் பாடலை விட
ரெம்பப் பிடிக்கும் கடவுளுக்கு
குழந்தைகளின் மொழிகள்..!


நமக்கோ
குழந்தைகள் பேசினால்
குமட்டல்
குழந்தைகள் கிறுக்கினால்
எரிச்சல்
குழந்தைகள் துள்ளினால்
தும்மல்
குழந்தைகள் விளையாடினால்
விக்கல்..!

பெரியவர்களை குழந்தைகளாக்கும்
குழந்தைகளை - நாம்
குழந்தையாய் பார்ப்பதில்லை.


குழந்தைகளை விட
தொலைக்காட்சிப் பெட்டிகளோடு
நெறுக்கம் அதிகம்


அவர்கள்
உதடுகள் உச்சரிக்க பொழியும்
பூமழையில் நனைந்து
மோட்சம் பெற
விரும்புவதில்லை நாம்.


மழையென்றால் குடைபிடித்தே
பழக்கப்பட்டவர்கள் நாம் தானே!

Saturday, February 19, 2011

ஓசை யில்லா ஒற்றைக் கொலுசாய்





காலமே என்மேலு னக்குத் துளியும்
கருணை யில்லையா? - நான்
ஆளான செய்தி யின்னும் நீதான்
அறிய வில்லையா?

பருவம் போடும் கோலம் என்னை
பனியாய் கரைக்குது - ஒரு
உருவ மில்லா கனவு வந்து
உயிரைக் கிழிக்குது.

பெயரின் பின்னே பட்டப் படிப்பு
பெரிதாய் போட்டேனே - மணக்
கயிறு கழுத்தில் ஏறத் தானோ
காசு கேட்பதா?

உலக வாழ்வு எனக்கு மட்டும்
பொய்யாய் போவதா? - என்
இளமை யெல்லாம் எனக்கு இன்று
எதிரி யாவதா?

வட்ட நிலவு வந்து என்னை
வெட்டி விட்டதே! - என்
கட்ட ழகுமே னியினைக் காற்று
சுட்டு விட்டதே!

சொந்த பந்தம் கூடும் நேரம்
கேள்வி யாகிறேன் - ஏன்
வந்த திந்த கேள்வி யென்று
வானைக் கேட்கிறேன்.

எந்தன் கனவு சொல்லி சிலிர்க்க
ஒருவன் இல்லையே - ஏன்
ஏட்டில் சேராத கவிதை யாக
என்ன வாழ்க்கையோ?

வான வில்லும் என்னைப் போலே
வதங்கிப் புழுங்குதோ! - ஓ
வானம் கூட அதனால் தானோ
அழுது புலம்புதோ..!

ஓசை யில்லா ஒற்றைக் கொலுசாய்
ஒலியைத் தொலைக்கிறேன் - அட
மீசை வைத்த பெண்ணோ என்று
ஆணை நினைக்கிறேன்.