Powered By Blogger

Sunday, November 20, 2011

என் இதயத் தடாகத்தில் அல்லிப் பூக்களின் ஆலாபனை




என் இதயத் தடாகத்தில் அல்லிப் பூக்களின் ஆலாபனை

வித்தகக் கவிஞர் பா.விஜய்

ஏழாண்டுகளுக்கும் மேலாக என்னிடம் உதவியாளராக இருந்து கொண்டிருக்கும் மீனாட்சிசுந்தரம், இன்று கவிஞர் என்ற உயர்வுக்குத் தன்னுடைய சுய உழைப்பின் மூலம் பரிணமித்திருக்கிறான்.
இவன் என்னுடைய ரசிகன் - வாசகன் - உதவியாளன் என்பதையும் கடந்து, நண்பன் - சகோதரன் என்ற உறவுமுறைக்குள் எங்கள் குடும்பத்தினர் அனைவரோடும் இதயங்கலந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு இனிமையாளன்.
இவனைப் பற்றிச் சொல்லும் போது, மதுரை நண்பர் கவிஞர் இரவி அவர்கள் சொன்னார் ‘‘இவ்வளவு ஆண்டுகள் உங்களோடு கூடவே இருந்துவிட்டு கவிதை எழுதாவிட்டால் எப்படி?’’ என்று.
ஆனால், இவன் கவிதை எழுதுவதற்கு பிரத்யோகமாக நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணமும், அதை நூலாக்க வேண்டும் என்ற உத்வேகமும் இவனுக்குள் தானாகவே உருவான ஒன்று, அதுதான் நியாயம்!
ஒருவனை நல்ல படிப்பாளனாக இன்னொருவர் உருவாக்க முடியும். ஆனால் நல்ல படைப்பாளியாக இன்னொருவரால் உருவாக்க முடியாது.
கவிஞன் என்பது தனக்குத் தானே செய்து கொள்கிற கர்வம் மிகுந்ததொரு பிரசவம். அப்படிப்பட்ட அனுபவத்தை தன்னுடைய படைப்புகளின் மூலம் அடைந்திருப்பது குறித்து இவன்மீது எனக்கு பிரகாசமான நம்பிக்கை ஏற்படுகிறது.
என்னோடு கூட இருந்த நாட்களில் - வருடங்களில் என்னுடைய செயல்கள், என்னுடைய பேச்சுமுறை, எனக்குப் பிடித்தது, பிடிக்காதது என அனைத்தையும் அறிந்து வைத்திருக்கக் கூடிய தன்னுடைய வேலையில் மிகத் தூய்மையாக இருந்து பணிபுரிந்து கொண்டிருக்கக் கூடிய ஒரு நல்ல பண்பாளனின் படைப்பாகவே இந்த கவிதைத் தொகுப்பைப் பார்க்கிறேன்.


வழக்கமாக, இளையதலைமுறை கவிஞர்கள் ஏராளமானோர் என்னிடம் அணிந்துரை வேண்டி கவிதைத் தொகுப்பு அனுப்புவார்கள். அப்படி நிறைய புத்தகங்கள் வருகையினால் எல்லா படைப்புகளையும் முழுமையாகப் படித்து என்னால் அணிந்துரை எழுதித்தர இயலாமல் போகலாம். அதனால் நூல்களைப் படிக்கும் பொறுப்பை மீனாட்சி சுந்தரத்திடம்தான் வழங்குவேன்.
அவனும் அந்த நூல்களைப் படித்து, அதிலுள்ள சிறப்பான கவிதைகளைத் தேர்ந்தெடுத்து என் குறிப்பேட்டில் குறித்து வைத்துவிடுவான். பிறகு, அந்த படைப்புகளைப் படித்துப் பார்த்துவிட்டு அவற்றிற்குத் தகுந்தாற்போல் அணிந்துரை வழங்குவது என் வழக்கம்.
எனவே இப்புத்தகத்தையும் அப்படி அழகான கவிதைகளை எடுத்துத் தொகுத்துச் சொன்னால் அது எல்லோருக்கும் நான் செய்கின்ற சமமானதொரு நிகழ்வாகிவிடும் என்பதனால் இவனோடு உள்ள என் நேசத்தைப் பதிவு செய்கிறேன்.
இப்புத்தகம் முழுவதும் முதல்முறை எழுந்து நடக்க ஆரம்பித்த ஒரு கவிஞனின் தைரியமான பார்வையாகவே பார்க்கிறேன்.

இவனைவிட அதிகம் நேசிக்கப்பட வேண்டியவர் இவனுடைய தந்தையார் திரு.பாலசுப்பிரமணியம். நெல்லைச் சீமையிலே சங்கரன்கோவில் என்கின்ற திருத்தலத்திலே அமைந்திருக்கிறது இவர்களுடைய இல்லம்.
இவனுடைய மூத்த சகோதரியின் திருமணத்திற்காக நான் சென்றிருந்த பொழுது, கிட்டத்தட்ட எண்பது வயதைக் கடந்த தாத்தா பாட்டியுடன் வசித்துக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த குடும்பத்தினரும், சிறுவர்களில் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரும் என்மீது பொதித்திருந்த அன்பினை, வைத்திருந்த மதிப்பினை நேரில் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்து உணர்ந்தேன்.
அத்திருமண நிகழ்ச்சியின் போது இவனுடைய தந்தையார் அவ்வளவு பரரப்பான வேலைகள், பணி நிமித்தங்களுக்கு இடையிலேயும் என்னை தங்கள் வீட்டின் மூத்த பிள்ளையைப் போல கவனித்துக் கொண்ட விதமும், நேசித்து அன்பு செலுத்திய விதமும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
எப்போது சென்னைக்கு வந்தாலும் என்னை சந்தித்து உரையாடுதல் என்பது அவருடைய இதயத்திற்குப் பிடித்தமானது. இப்படியாய், அவர்களுடைய குடும்பத்தோடு கலந்து பழகிய உணர்வலைகள் இப்புத்தகத்தைப் படிக்கையில், கைகளில் தாங்குகையில் என் இதயத் தடாகத்தில் அல்லிப் பூக்களாய் மலர்ந்து ஆலாபனை செய்து எங்கெங்கும் மணம் பரப்புகின்றன.
இவனுடைய சகோதரர் பால.கணேசன் நல்ல வடிவமைப்பாளர். ஊரார் வீட்டுப் பொங்கலுக்கே நெய்யை அள்ளி ஊற்றி ஊற்றி சமைப்பார்கள் என்றால், தன் வீட்டுப் பொங்கலுக்கு காட்டும் தாராளத்தைக் கேட்கவா வேண்டும். பட்டாம்பூச்சி வாசம் எனும் இத்தொகுப்பை பார்த்துப் பார்த்து செதுக்கிச் செதுக்கி வடிவமைத்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.



எனக்குத் தெரிய ஒரு கவிஞரிடம் நீண்டகாலம் உதவியாளராக இருந்து, அவர் ஒரு கவிதைப் புத்தகத்தை எழுதி, அதை அந்த கவிஞரே வந்து வெளியிடுவது என்பது மிகச்சாதாரணமாக சாமான்யமாக இலக்கிய உலகில் நிகழ்ந்துவிடக் கூடிய ஒன்று அல்ல.
நானறிந்த வரையில் இதற்கு முன்பு இதுபோல் நிகழ்ந்திருக்கவில்லை. நிகழ்ந்திருந்தால் மகிழ்ச்சி! அந்த அளவில் இந்நூலினைக் கண்டு நான் பெருமிதம் அடைகிறேன்.
இந்தப் படைப்பை வாசிக்கையில், என்னிடம் இத்தனை ஆண்டுகாலம் உதவியாளராக இருந்து கொண்டிருக்கிற இவனை தோள் தட்டிக் கொடுத்துத் தொடர்ந்து ஓடும் உத்வேகத்தினை ஏற்படுத்த வேண்டுமென எண்ணுகிறேன்.


குமரன் பதிப்பகத்தின் சார்பாக இந்நூலினை வெளியிடும் திரு,வைரவன் அவர்கள் குறிப்பிடப்பட வேண்டிய மாபெரும் சான்றோர். என்னுடைய பல புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்ற இவர், என்னுடைய உதவியாளரின் கவிதைப் புத்தகத்தையும் வெளியிடுவது என்பது என்னையும் சேர்த்து கௌரவிக்கின்ற நட்புக்கு அவர் தரும் மரியாதையாகவே நான் கருதுகிறேன்.


வழக்கமாய், சம்பிரதாயமாய், ஒரு அணிந்துரையை கடிதத்தை நிறைவு செய்வதைப் போல என்னால் இதை நிறைவு செய்ய இயலவில்லை, இவன் என்னிடம் படித்தது, இலக்கியத்தில் படித்தது, வாழ்க்கையில் படித்தது என அனைத்து படிப்பினையும் ஒன்று திரட்டி இந்நூலின் மூலமாக ஆரம்பித்திருக்கின்ற எழுத்துப் பயணத்தில் மிகப்பெரிய எல்லைகளைத் தொட்டு பிரகாசமானதொரு எதிர்காலத்தை என்றென்றும் அடைவதற்கு இதயப்பூர்வமாக இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

இவனுடைய எழுத்துக்கள் வாழ்க.
இவனுடைய முயற்சிகள் வெல்க!

நம்பிக்கையுடன்
 பா.விஜய்

No comments:

Post a Comment