Powered By Blogger

Saturday, February 19, 2011

ஓசை யில்லா ஒற்றைக் கொலுசாய்





காலமே என்மேலு னக்குத் துளியும்
கருணை யில்லையா? - நான்
ஆளான செய்தி யின்னும் நீதான்
அறிய வில்லையா?

பருவம் போடும் கோலம் என்னை
பனியாய் கரைக்குது - ஒரு
உருவ மில்லா கனவு வந்து
உயிரைக் கிழிக்குது.

பெயரின் பின்னே பட்டப் படிப்பு
பெரிதாய் போட்டேனே - மணக்
கயிறு கழுத்தில் ஏறத் தானோ
காசு கேட்பதா?

உலக வாழ்வு எனக்கு மட்டும்
பொய்யாய் போவதா? - என்
இளமை யெல்லாம் எனக்கு இன்று
எதிரி யாவதா?

வட்ட நிலவு வந்து என்னை
வெட்டி விட்டதே! - என்
கட்ட ழகுமே னியினைக் காற்று
சுட்டு விட்டதே!

சொந்த பந்தம் கூடும் நேரம்
கேள்வி யாகிறேன் - ஏன்
வந்த திந்த கேள்வி யென்று
வானைக் கேட்கிறேன்.

எந்தன் கனவு சொல்லி சிலிர்க்க
ஒருவன் இல்லையே - ஏன்
ஏட்டில் சேராத கவிதை யாக
என்ன வாழ்க்கையோ?

வான வில்லும் என்னைப் போலே
வதங்கிப் புழுங்குதோ! - ஓ
வானம் கூட அதனால் தானோ
அழுது புலம்புதோ..!

ஓசை யில்லா ஒற்றைக் கொலுசாய்
ஒலியைத் தொலைக்கிறேன் - அட
மீசை வைத்த பெண்ணோ என்று
ஆணை நினைக்கிறேன்.

No comments:

Post a Comment